Sunday 21 August 2011

இந்தப்பாலத்தில் கைவைத்துப் பாருங்கள், அம்மையாரே..!!!

சென்ற வாரம் அவசர வேலையாக  காட்டுமன்னார்கோவில் செல்லவேண்டியிருந்தது. மாயவரத்திலிருந்து சிதம்பரம் போய்தான் இதுவரையிலும் கா.ம.கோவில் செல்வது வழக்கம். அது தான் ஒரே வழியும் கூட. 65 கி.மீ தூரம்,  கடப்பதற்கு இரண்டுமணி நேரம் ஆகும்.

ஆனால் சென்ற ஆண்டு  தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட, நாகை மாவட்டத்தின் மணல்மேட்டினையும், தென்னாற்காடு மாவட்டத்தின் முட்டத்தையும் இணைக்கும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்ட, சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 2.8 கி.மீ நீளமுடைய பாலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது அதன் வழியாகச் சென்றால் விரைவில் செல்லலாம் என்று ஒரு நண்பர் சொன்னதை கேட்டு அதன்படியே பயணத்தை ஆரம்பித்தேன்.

மாயவரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மணல்மேட்டினை 20 நிமிட பயணத்தில் அடைந்தோம். அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றங்கரையில் பாலத்தின் முகப்பை அடைய சாலை போடும்பணி ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், அந்த இடத்தை அடைய 10 நிமிடம் ஆனது.

கொள்ளிடக்கரையை அடைந்தால் அந்த பிரம்மாண்ட பாலம் கண்முன்னே விரிகிறது. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பில்லர்கள் போடப்பட்டு தயாராய் நிற்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இணைக்கும் பணி கால்வாசி முடிந்த நிலையில் இருக்கிறது.

ஆற்றில் பில்லர் போடுவது தான் மிகவும் சிரமமான வேலை. அதை இணைப்பது விரைவாக முடித்துவிடக்கூடியது தான். அதன் அருகே அந்த பாலப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாகனங்கள் வந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் மண் சாலையில் தான் எங்களை அனுமதித்தார்கள்.

ஆற்றின் குறுக்கே மட்டும் அந்த பாலம் 1.1 கி.மீ தொலைவு வருகிறது. அக்கரை சென்றதும், முன்னால் மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சரான திரு. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களுடைய சொந்த ஊரான முட்டம் வருகிறது. அதிலிருந்து 8 கி.மீ தொலைவில் காட்டுமன்னார் கோவில்!

அதாவது ஆற்றைக் கடந்தவுடன் 15 நிமிடங்களில் காட்டுமன்னார் கோவிலை அடைந்துவிட்டோம். ஆக மயிலாடுதுறையிலிருந்து  சரியாக 50 நிமிடத்தில் அடைந்துவிட்டோம்!!

நம்பவே முடியவில்லை.!! ஒரு நல்ல ஆட்சியாளர் நினைத்தால் 65 கி.மீ தூரத்தை 30 கி.மீ ஆகவும், இரண்டு மணிநேர பயணத்தை 50 நிமிட பயணமாகவும் மாற்றமுடிகிறது!!!!

ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் உறுத்தலாக உட்கார்ந்து தொண்டையை அடைத்தது. நம் மக்கள் தவறுதான் செய்துவிட்டார்களோ என்று...!!!!

அம்மையாரே, உங்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்னால் முதல்வர் பார்த்துப் பார்த்துக் கட்டிய புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை முடக்கிப் போட்டிருக்கிறீர்களே(?) பத்திரிகைகள் எல்லாம் பறைசாற்றுவது போல் நீங்கள் தைரியம் மிக்க பெண்மணி என்றால் முன்னால் துணை முதல்வரால் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் கைவைத்துப் பாருங்கள்?!

நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர் பெருமக்களில் யாராவதோ அந்தப் பாலத்தைத் திறந்து வைக்கும் பொழுது தளபதி அவர்களின் புகழ்தான் காட்டாற்று வெள்ளம்போல கரைபுரண்டு மக்கள் மனங்களில் நிரம்பி வழியப்போகிறது!! அந்த வெள்ளத்தில் நீங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்படுவது உறுதி!!!

4 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. தமிழ் நாட்டில் உள்ள பல அரசாங்க கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், சமத்துவபுரங்கள், தொழிற்சாலைகள், நீதி மன்றங்கள், அலுவலகங்கள், பூங்கா, விளையாட்டு திடல், சிறைசாலை என்று மக்களுக்கு தேவையான பல கட்டமைப்புகளை சிந்தித்து செயல் படுத்தியுள்ளது கலைஞர். இவை எல்லாம் நினைத்தால் வராது. திட்டமிடல், ஆர்வம், தொடர் கண்காணிப்பு வேண்டும். செய்வது சிரமம். அதை உடைப்பது, மாற்றுவது, திறந்து வைப்பது எளிது. இதில் மிக மிக சிறிய அளவில் செய்து விட்டு (எப்போதும் தூங்கி விட்டோ ) அடாவடியாக பேசி தைரியமாக இருப்பதாக காட்டும் ஜெவை மக்கள் தூக்கி வைப்பது வியப்பாக உள்ளது. இரண்டும் வேண்டும் என்னும் மக்களின் மாறி மாறி தீர்ப்பு புரியாது உள்ளது. மக்களுக்காக வளர்ச்சி விசயங்களில் முழு கவனமும் ஜெ செலுத்தி கட்டமைப்புகளை மேலும் உருவாக்கினால், பதவி கொடுத்த மக்களுக்கு செய்யும் நன்றியாகும்.

    முன்பு துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடாவடி செய்த யாரும் இப்போது மூச்சை விடுவது கூட தெரியாது உள்ளனர். இதை எப்படி சொல்வது?

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை . நல்லது செய்வதற்கு ,மக்கள் பயன்பெறுவதற்கு தயக்கம் வேண்டாம் . மக்கள் வரிப் பணம் மக்களுக்கு உதவட்டும் .அவசியம் அனைவருக்கும் தேவையான பாலம்

    ReplyDelete